பண பலம், அதிகாரத்துக்கும், மக்கள் சக்திக்கும் இடையே நடைபெறும் தேர்தல்: நாராயணசாமி!

“பிரதமர் மோடியின் பண பலம், அதிகாரத்துக்கும், ராகுல் காந்தியின் மக்கள் சக்திக்கும் இடையே நடைபெறும் மக்களவைத் தேர்தல்” என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி மக்களவை தொகுதிக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள வ.உ.சி.பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பசுமை வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவ்ர் கூறியதாவது:-

இந்த மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளும் தங்களுடைய வாக்குகளை தவறாமல் பதிவு செய்து இந்திய சுதந்திரத்தை காப்பாற்ற முனைந்து செயல்பட வேண்டும். இந்த தேர்தல் பணநாயகத்துக்கும், மக்கள் சக்திக்கும் இடையேயான் தேர்தல். ஒருபுறம் பிரதமர் மோடியின் பண பலம், அதிகாரம். இன்னொருபுறம் ராகுல் காந்தியின் மக்கள் சக்தி. இவை இரண்டும் இப்போது தேர்தல் களத்தில் நிற்கின்றன. இந்திய நாட்டு சரித்திரத்தில் மக்கள் சக்திதான் வென்றதாக இதுவரை நடைமுறையில் இருந்து வருகிறது. கண்டிப்பாக மக்கள் சக்தி இந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெறும். ராகுல் காந்தி பிரதமராக வருவார்.

பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார். அவர் மக்களால் அங்கீகரிக்கப்படுகின்ற எந்த சாதனையும் செய்யவில்லை. அது குறித்து அவர் இந்த மக்களவை தேர்தலில் பேசவுமில்லை. காங்கிரஸ் – திமுகவை பற்றி வசைபாடுவதும், காங்கிரஸ் தலைவர்களை கொச்சைபடுத்தி பேசுவதும், வடமாநிலங்களில் இண்டியா கூட்டணி தலைவர்களை ஊழல் பேர்வழிகள் என கூறியும் ஓட்டு சேகரிக்கிறார். ஆனால், ஒட்டுமொத்த ஊழல்களின் உருவமே நரேந்திர மோடிதான். தேர்தல் பத்திரம் மூலம் மோடியும், அமித்ஷாவும் இமாலய ஊழலை செய்துள்ளார்கள் என்று தெரிகிறது. புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு செயல்படாத அரசாக, ஊழல் அரசாக, மக்களை பாதுகாக்காத அரசாக உள்ளது. கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. மக்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்துகிற அரசாக உள்ளது. கஞ்சா, அபின், பிரவுன்சுகர் தாராளமாக நடமாடுகின்றன. பெண்களுக்கும், பெண் குழந்தகளுக்கும் பாதுகாப்பு இல்லை.

ரேஷன் கடையை திறக்காத ஆட்சி நடக்கிறது. மக்கள் அரிசி வேண்டும் என்றால், அதை கூட இவர்களால் கொடுக்க முடியவில்லை. தேர்தல் சமயத்தில் ஆட்சிக்கு வந்தால் மாநில அந்தஸ்து பெறுவோம் உள்ளிட்ட நூற்றுக் கணக்கான வாக்குறுதிகளை ரங்கசாமி கூறினார். அதை அவர் நிறைவேற்றவில்லை. பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் சொத்து குவித்து வைத்துள்ளார். இது எல்லாம் மக்களுக்கு தெரியும். புதுச்சேரியில் கூட பாஜக பணத்தை வாரி இறைக்கிறது. இதை மக்கள் ஒரு பொருட்களாக கருதவில்லை. ஊழலை எதிர்த்து மக்கள் ஒட்டுமொத்தமாக கொதித்து எழுந்துள்ளார்கள். வாக்குகளை விலை கொடுத்து வாங்கும் கட்சி பாஜக. அதனுடைய வேட்பாளராக நமச்சிவாயம் இருக்கிறார். ரங்கசாமி, நமச்சிவாயத்திடம் பணபலம் உள்ளது. எங்களிடம் மக்கள் பலம் உள்ளது.

எங்களை பார்த்து குடும்பக் கட்சி என்று சொல்கின்ற மோடி, பாஜக குடும்ப கட்சி இல்லையா? புதுச்சேரியில் மாமனார் முதல்வர், மருமகன் அமைச்சர். மருமகனை இப்போது மக்களவைக்கு அனுப்ப ரங்கசாமி துடித்து கொண்டிருக்கிறார். புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் இது தெரியும். எங்களுடைய வேட்பாளர் வைத்திலிங்கம் அமோக வெற்றி பெற்று மக்களவை செல்வார். நாட்டில் ராகுல் காந்தி அலை வீசுகிறது. மோடியை புறம் தள்ளி ராகுல் காந்தி பிரதமாக வருவார். அவரது அமைச்சரவையில் வைத்திலிங்கம் இருப்பார். இதுதான் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.