நமது முன்னோர்கள் கட்டி வைத்த இந்தியாவை மீட்பதற்காக வாக்களித்திருக்கிறேன்: இயக்குநர் அமீர்!

“சாதி, மதம் கடந்து தேசத்தின் நலன் கருதி வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. அந்த வகையில் என்னுடன் வாக்கை நான் செலுத்தி விட்டேன். நமது முன்னோர்கள் கட்டி வைத்த இந்தியாவை மீட்பதற்காக வாக்களித்திருக்கிறேன்” என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

மதுரை மக்களவைத் தொகுதி வாக்குச்சாவடிகளில் காலை 7:00 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில், மதுரை அம்பிகா கல்லூரி வாக்குச்சாவடி மையத்தில் இயக்குநர் அமீர் வாக்காளர்களுடன் வரிசை நின்றபடி வாக்களித்தார். பின்னர் வாக்குச்சாவடி மையத்தின் அருகே ஏராளமான ரசிகர்கள் இயக்குநர் அமீருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டபோது, ரசிகர்கள் அனைவரும் ஜனநாயக கடமையான வாக்களிப்பதை நிறைவேற்ற வேண்டுமென அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இயக்குநர் அமீர், “ஒரு நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிப்பது வாக்கு தான். வாக்களிப்பது ஒவ்வொரு வாக்காளர்களின் கடமை. யாருக்கு வாக்களிக்கலாம் என்பது அவரவரின் முடிவு. ஆனால், இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வாக்களிப்பது தான் சரியான தாக இருக்கும். சாதி, மதம் கடந்து தேசத்தின் நலன் கருதி வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. அந்த வகையில் என்னுடன் வாக்கை நான் செலுத்தி விட்டேன். நமது முன்னோர்கள் கட்டி வைத்த இந்தியாவை மீட்பதற்காக வாக்களித்திருக்கிறேன்” என்றார்.