வாக்களிக்க வந்த வீரப்பன் மகள் வித்யாராணியுடன் பாமகவினர் கடும் வாக்குவாதம்!

மேட்டூர் அருகே வாக்கு செலுத்த வந்த கிருஷ்ணகிரி நாதக வேட்பாளரும், வீரப்பன் மகளுமான வித்யாராணியுடன் பாமகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரும், வீரப்பனின் மகளுமான வித்யாராணி இன்று காலை வாக்களிக்க மேட்டூர் வந்தார். பின்னர், மேட்டூர் அருகே குள்ளமுடையானூரில் தனது ஆதரவாளர்களுடன் காரில் வந்த அவர் வாக்குசாவடிக்கு அருகில் கார்களை நிறுத்தி இறங்கிச் சென்றார்.

வேட்பாளர் வித்யாராணியுடன் அவரது ஆதரவாளர்கள் வாக்கு சாவடி மையத்தின் உள்ளே நுழைந்தனர். அப்போது அங்கு வாக்களிக்க வரிசையில் நின்றிருந்த பாமகவை சேர்ந்த பிரமுகர் கோவிந்தன், வரிசையில் நின்று வாக்களிக்க வேண்டும் என கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளியேறும்படி கூறினார். இதனால் இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

வாக்குசாவடி மையத்தில் இருந்த போலீஸாரால் சூழ்நிலை கட்டுப்படுத்த முடியவில்லை. பின்னர், ரோந்து பணியில் இருந்த போலீஸார் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து, வாக்களித்த வித்யாராணி வாக்குச்சாவடிக்கு வெளியே வந்தார். அப்போது, வெளியே இருந்த பாமகவினருக்கும் வித்யாராணி ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குச்சாவடிக்கு வெளியிலும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதிக்குள் இருந்து கார்களை வெளியே எடுக்கும் படியும், அனைவரும் கலைந்து செல்ல வேண்டுமென கூறியதால் வித்யாராணி தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இச்சம்பவத்தால் வாக்குச்சாவடி மையத்தில் பரபரப்பு நிலவியது.