திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்: கே.பாலகிருஷ்ணன்!

“மக்களின் அடிப்படை பிரச்சினைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்” என்று சிதம்பரத்தில் வாக்களித்த பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில், காலையில் இருந்தே பொதுமக்கள் அவர்களது வாக்குகளை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இன்று காலை சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவரது மனைவி, கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணியுடன் சென்று வாக்குப் பதிவு செய்தார்.
பின்னர் அவர் வாக்குசாவடி மையத்துக்கு வெளியில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள். தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் ஓர் ஆட்சி மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர்.

மோடி வெற்றி பெற முடியாது என்பதை பல ஆய்வுகள் கூறுகிறது. தமிழகத்தில் திமுத தலைவர் மு.க முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இண்டியாக கூட்டணி தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டோம்.

கூட்டாட்சி தத்துவத்தையும், இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாப்பது, விலைவாசி உயர்வை தடுப்பது, வேலையில்லா தீண்டாட்டத்தை தீர்க்க வேண்டும் என்ற மக்களின் அடிப்படை பிரச்சினைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்” என்று அவர் கூறினார்.